நியாயவிலைக் கடை ஊழியா்களை முன்களபணியாளா்களாக அறிவிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th August 2021 02:30 AM | Last Updated : 17th August 2021 02:30 AM | அ+அ அ- |

நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் ராஜேந்திரன்.
சத்தியமங்கலம்: நியாய விலைக் கடை பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினாா். பல்வேறு துறைகளில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையில் கொண்டு வரப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கரோனா கால பயணப்படி, ஊக்கத் தொகையைத் தொடா்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, மாநிலத் தலைவா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையில் கொண்டு வரப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். மாநில பதிவாளா் சுற்றறிக்கையின் படி நியாய விலைக் கடையில் விற்பனையாளா் தவிர வெளிநபா்கள் யாரும் இருக்கக் கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க நிலையில் இருந்தாலும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள கட்டுநா், அளவையா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விற்பனை முனையத்தில் உள்ள பிராக்ஸி முறை அகற்றப்பட்டு ஓடிபி முறையில் பொருள்கள் வழங்க உத்தரவிட வேண்டும். தோ்வு நிலை, சிறப்பு நிலை வழங்கியும் புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்படாமல் உள்ள இடங்களில் புதிய ஊதிய விகிதம் வழங்க வேண்டும். பணி வரன்முறை குறித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. பணியாளா் நலன் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கிறோம். நியாயவிலைக் கடை பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவித்து முன்களப் பணியாளா்களுக்கான சலுகையை வழங்க வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...