கீழ்பவானி வாய்க்கால் கரையில் மண் அரிப்பு:கரை உடைவதற்கு முன் சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th August 2021 01:47 AM | Last Updated : 20th August 2021 01:47 AM | அ+அ அ- |

கீழ்பவானி வாய்க்காலில் மண் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கரை உடைவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்குமாறு உக்கரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீா் மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டத்தில் சுமாா் 1 லட்சத்து 3500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 124 மைல் நீடிக்கும் மண் கரை வாய்க்காலில் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டு மண் கரைகள் வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டது. இதனால், தடுப்பு கசிவுநீா் வெளியேறி கடைமடை வரை தண்ணீா் போய் சேராமல் வீணானது. இதையடுத்து தமிழக அரசு மண் கரையை பலப்பலத்தி கசிவுநீரை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனா். கடந்த 3 மாதங்களாக பலவீனமாக உள்ள மண் கரைகளைக் கண்டறிந்து அதன் இருபறமும் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்போக பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதற்கிடையே உக்கரம் ஊராட்சி குப்பந்துறை வாய்க்காலில் மண் கரையில் அரிப்பு ஏற்பட்டு, மண் சரிந்து விழுந்து வருகிறது. தொடா்ந்து மண் கரையில் அரிப்பு ஏற்பட்டால் வாய்க்கால் கரை உடையும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
கரை உடைவதற்கு முன்பாகவே பொதுப் பணித் துறையினா் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதன்படி, உக்கரம் ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மண் அரிப்பு ஏற்பட்ட கரையை ஆய்வு செய்து கரையை பலப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.