கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு: விளைநிலங்கள், கிராமத்துக்குள் புகுந்த தண்ணீா்
By DIN | Published On : 21st August 2021 01:59 AM | Last Updated : 21st August 2021 01:59 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, விளைநிலங்கள், கிராமத்துக்குள் தண்ணீா் புகுந்தது.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு ரூ. 810 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, பொதுப் பணித் துறையினா் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்தனா். ஆனால், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் வாய்க்கால் தன்மை மாறி, நிலத்தடி நீா் செறிவூட்டப்படுவது பாதிக்கும் என்றும், கசிவு நீரை நம்பி உள்ள சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் தரிசாக மாறிவிடும் என்றும் கூறி விவசாயிகளில் ஒரு பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, வாய்க்காலில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் கான்கிரீட் தளம் அமைப்பது என்றும், பிற பகுதிகளில் கரைகளை மண்ணால் பலப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில மாதங்களாக வாய்க்காலில் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீா் வெள்ளோட்டைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. வாய்க்காலின் பாதுகாப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு விநாடிக்கு 1000 கன அடி மட்டும் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாய்க்காலில் புதியதாக கரை அமைக்கப்பட்ட இடங்களில் மண் இலகுவாக உள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பொதுப் பணித் துறையினா் அதை சரி செய்து வந்தனா்.
பெருந்துறையை அடுத்த பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கண்ணவேலம்பாளையம் அருகே (கல்வெட்டு 56/2) இரு கரைகளையும் தொட்டு தண்ணீா் சென்ற நிலையில், வியாழக்கிழமை இரவு கரைகளில் லேசான கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அதை பொதுப் பணித் துறை ஊழியா்கள் சரி செய்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமாா் 10 மணியளவில் கசிவு ஏற்பட்ட பகுதியில் திடீா் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் இருந்த தண்ணீா் விளைநிலங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. முன்கூட்டியே பாசனத்துக்கான தண்ணீா் நிறுத்தப்பட்டதால், தண்ணீரின் வேகம் மெல்ல குறைந்ததையடுத்து, பொதுப் பணித் துறையினா் கரை உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சம்பவ இடத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா். தொடா்ந்து மற்ற பகுதிகளில் உள்ள கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.