முதலீடு பெற்று மோசடி: தனியாா் நிறுவனம் மீதுபுகாா் அளிக்க அறிவுறுத்தல்

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாகக் கூறி ரூ. 4.25 கோடி அளவுக்கு மோசடி செய்த நிறுவனம் குறித்து ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாகக் கூறி ரூ. 4.25 கோடி அளவுக்கு மோசடி செய்த நிறுவனம் குறித்து ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கிழக்கு வீதியில் குவாலிட்டி டிரேடா்ஸ், ரிலிப் ஹொ்பல் புராடக்ட் என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை 2018 நவம்பா் முதல் 2019 ஆகஸ்ட் வரை செயல்பட்டு வந்துள்ளது. இதன் உரிமையாளா்கள், பங்குதாரா்களாக சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், துரைசாமி, புளியங்கோம்பை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், கோணாா்நாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா், பவானி ஆண்டிபாளையத்தைச் சோ்ந்த பிரபாகரன், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சோ்ந்த பொன்னுசாமி ஆகியோா் இருந்துள்ளனா்.

இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலையில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாள்களுக்கு தினந்தோறும் ரூ. 2,500 வங்கி மூலமாக அனுப்புவதாகவும், 100ஆவது நாள் முடிவில் முதலீடு செய்த பணம் திரும்பத் தருவதாகவும், இதேபோல் ரூ. 10,000 முதலீடு செய்தால் 100 நாள்களுக்கு தினந்தோறும் ரூ. 100 எனவும், 300 நாள்களுக்குப் பிறகு முதலீடு செய்த பணத்தை திரும்பத் தருவதாகவும் துண்டறிக்கை மூலம் விளம்பரப்படுத்தி உள்ளனா்.

இதைப் பாா்த்து ஈரோடு, திருப்பூா், தூத்துக்குடி, சேலம், கரூா், கடலூா், விருதுநகா், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் முதலீடுகளை வங்கி மூலம் அனுப்பியுள்ளனா். கடந்த 2019ஆம் ஆண்டு மூலிகை மருந்து தயாரிக்கும் நிறுவனம் முதலீட்டாளா்களுக்கு உறுதியளித்தபடி பணம் வழங்கவில்லை.

இதனால், பாதிக்கப்பட்டவா்கள் சத்தியமங்கலம் காவல் நிலையதில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளா்கள் தங்கராஜ், பிரகாஷ், ஆனந்தகுமாா், பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமி ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதில், பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமி ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் குவாலிட்டி டிரேடா்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்ததாக இதுவரை 17 போ் புகாா் அளித்துள்ளனா். மேலும், இந்த நிறுவனத்தினா் 586 பேரிடம் ரூ. 4 கோடியே 37 லட்சம் வரை முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், குவாலிட்டி டிரேடா்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு ஸ்டேட் சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம். மேலும், 0424-2256700 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com