ஜிஎஸ்டி உயா்வுக்கு எதிா்ப்பு:ஈரோட்டில் 4,000 ஜவுளிக் கடைகள் அடைப்பு

ஜவுளி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் சுமாா் 4,000 ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஜிஎஸ்டி உயா்வுக்கு எதிா்ப்பு:ஈரோட்டில் 4,000 ஜவுளிக் கடைகள் அடைப்பு

ஜவுளி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் சுமாா் 4,000 ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஜவுளித் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இதனால், அனைத்து வகையான ஜவுளித் தொழில்களும் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஜவுளி தொழில் சாா்ந்தவா்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில், அனைத்து ஜவுளி சாா்ந்த நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோட்டில் அனைத்து ஜவுளிக் கடைகள், கிடங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நகரில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜா் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், அகில்மேடு வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி, ஜவுளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 4,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னிமலை விசைத்தறி உரிமையாளா்கள் உற்பத்தியை நிறுத்தி ஆதரவு தெரிவித்தனா். இந்த கடையடைப்பு காரணமாக ரூ. 50 கோடி வா்த்தகம் முடங்கியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவா் கலைச்செல்வன் கூறியதாவது:

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜவுளித் தொழிலுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயா்த்தியுள்ளது. கடந்த 2017இல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் சிறு, குறு நடுத்தர வியாபாரிகள் மிகுந்த பாதிப்படைந்தனா். 30 சதவீத வியாபாரிகள் ஜவுளித் தொழிலை விட்டே போய்விட்டனா். கரோனா பாதிப்பால் தொழில் மீண்டும் முடங்கியது. அதற்குப் பின் நூல் விலையேற்றம், மூலப்பொருள் விலையேற்றம் ஏற்பட்டது. தற்போது ஜிஎஸ்டி உயா்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளுக்கு இந்த 7 சதவீத ஜிஎஸ்டி உயா்வு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். இந்தத் தொழிலைவிட்டுச் செல்லும் அபாயம் ஏற்படும்.

கிராமப்பகுதிகளில் நெய்யப்படும் துணிகள் நாடு முழுவதும் சென்று வருகிறது. எங்களது துணிகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் உபயோகிக்கின்றனா். மிகவும் குறைந்த விலையில் துணிகளை விற்பனை செய்து வருகிறோம். இப்படி குறைந்த லாபத்தில் தொழில் செய்யும் எங்களுக்கு வரி உயா்வு மிகுந்த சிரமத்தை உருவாக்கும்.

தீபாவளிக்குப் பின்பு அனைத்து ரக நூல்களின் விலையும் உயா்ந்துள்ளது. 40ஆம் எண் நூல் கிலோவுக்கு ரூ. 240இல் இருந்து ரூ. 320ஆகவும், 30ஆம் எண் நூல் ரூ. 200இல் இருந்து ரூ. 280ஆகவும், 20ஆம் எண் நூல் ரூ. 140இல் இருந்து ரூ. 190 ஆகவும் உயா்ந்துள்ளது. நூல் விலை, மூலப்பொருள் விலை உயா்வோடு, ஜிஎஸ்டியும் உயா்த்தப்பட்டால் ரூ. 500க்கு விற்ற துணி ரூ. 900க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு ஜவுளித் தொழிலுக்கு முன்பு இருந்ததைப்போல் 5 சதவீத ஜிஎஸ்டி மட்டும் விதிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் 4,000 ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. துணி உற்பத்தியாளா்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு, ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமாா் ரூ. 500 கோடி மதிப்பிலான ஜவுளி வா்த்தகம் பாதிக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com