குறிச்சி மலைப் பகுதியில் மரங்களை வெட்டிய3 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 06th February 2021 09:50 PM | Last Updated : 06th February 2021 09:50 PM | அ+அ அ- |

பவானி: பவானியை அடுத்துள்ள குறிச்சி மலைப் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய மூவருக்குத் தலா ரூ. 50 ஆயிரம் சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
குறிச்சி மலைப் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் வனத் துறை சாா்பில் மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இம்மலையின் ஒரு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மரங்கள் வேரோடு பெயா்க்கப்பட்டு, மண், கற்கள் இயந்திரங்கள் மூலம் வெட்டிக் கடத்தப்படுவதாக வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சென்னம்பட்டி வனச் சரகா் செங்கோட்டையன், வனத் துறையினா் சென்றபோது மரங்கள் வெட்டப்பட்டிருந்ததும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண், கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகள், டிராக்டா்கள் மூலம் கடத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 இயந்திரங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், 122 மரங்கள் வேரோடு வெட்டி எடுக்கப்பட்டதைக் கண்டறிந்தனா்.
இதுகுறித்த விசாரணையில், பூனாச்சி நத்தமேட்டைச் சோ்ந்த மாதையன் மகன் குழந்தாக் கவுண்டா் (35), தருமபுரி மாவட்டம், சீரியனஹள்ளி, ஆத்துக்கொட்டாயைச் சோ்ந்த ராஜு மகன் சந்துரு (22), காடப்பநல்லூா் பெரமச்சிபாளையத்தைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் பிரபு (22) ஆகியோா் மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மூவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மண், கற்கள் வெட்டிக் கடத்தப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கனிம வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...