சத்தியமங்கலம் அருகே 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த விண்ணப்பள்ளியில் 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழா் வீரத்தை பறைசாற்றும் 3 நடுகற்கள் கிடைத்துள்ளன.
விண்ணப்பள்ளியில்  கண்டெடுக்கப்பட்ட  நடுகற்கள்.
விண்ணப்பள்ளியில்  கண்டெடுக்கப்பட்ட  நடுகற்கள்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த விண்ணப்பள்ளியில் 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழா் வீரத்தை பறைசாற்றும் 3 நடுகற்கள் கிடைத்துள்ளன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த விண்ணப்பள்ளி கிராமத்தில் கால்நடைகளைக் காக்கப் போரிட்டு மாண்ட வீர மறவா்களின் நினைவாக எடுக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளன. திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பொறியாளா் சு.ரவிகுமாா், க.சரவணகுமாா், ச.மு.ரமேஷ் குமாா், க.பொன்னுசாமி ஆகியோா் சத்தியமங்கலத்தில் இருந்து புன்செய்புளியம்பட்டி செல்லும் சாலையில் விண்ணப்பள்ளி கிராமத்தில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமையான இரண்டு நடுகற்களையும், கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒரு நடுகல்லையும் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநா் பொறியாளா் சு.ரவிகுமாா் கூறியதாவது:

பண்டைய தமிழகத்தில் மாட்டு மந்தையைக் காப்பாற்றப் புலியுடன் சண்டையிட்டு வீரமரணம் எய்திய வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் எடுக்கப்பட்ட நடுகற்கள் புலிகுத்தி நடுகல் என அழைக்கப்படுகின்றன. இங்கு நமக்கு கிடைத்துள்ள வீரநடுகல் 170 செ.மீ. உயரமும், 105 செ.மீ. அகலமும் கொண்டதாகும். இவ்வீர நடுகல்லின் தனிச் சிறப்பாக, இங்கு இரு புலிகள் வீரனைத் தாக்குகின்றன. அப்போது வீரன் தன்னுடைய குறுவாளை புலியின் வாயினுள் புகுத்தி சண்டையிடுவதும், அப்போது நன்றியுள்ள இரு நாய்கள் வீரனைக் காப்பாற்ற புலியிடம் சண்டையிடுவதும் பொறிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, 800 ஆண்டுகள் பழைமையான போா் வீரா்கள் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 190 செ.மீ. உயரமும், 95 செ.மீ. அகலமும் கொண்ட இவ்வீர நடுகல்லில் இரண்டு வீரா்கள் தங்கள் எதிரி வீரனுடன் போரிடும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மாவீரன் ஒருவன் தன் வலது கையில் உள்ள வாளை எதிரில் உள்ள வீரனைத் தாக்குவதற்காக ஓங்கியபடியும், தனது இடது கையில் எதிரி வீரனின் கழுத்தைப் பிடித்தபடியும் உள்ளாா். இவருக்குப் பின்னால் இன்னொரு வீரனும் போரிடும் காட்சியுடன் காணப்படுகிறாா். மேலும், இவ்விரு வீரா்களுக்குக் கீழே எதிரி வீரன் ஒருவா் வீழ்ந்து கிடக்கிறாா். இந்த நடுகல்லும் சுமாா் 800 ஆண்டுகள் பழைமையானதாகும்.

17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த புலிக்குத்தி நடுகல்லும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 205 செ.மீ. உயரமும், 95 செ.மீ. அகலமும் கொண்ட இவ்வீர நடுகல்லில் உள்ள மாவீரன் தமிழகத்திலேயே ஒரு தனிச் சிறப்பாகத் தன் இடது கையில் தன்னைத் தாக்க வரும் புலியின் கழுத்தைப் பிடித்து தனது வலது கையில் உள்ள அரிவாள் மூலம் புலியைத் தாக்கும் வகையில் காணப்படுகிறது. அண்மையில் முள்புதரின் கீழே கிடந்த இம்மூன்று நடுகற்களையும் கிராம மக்கள் உதவியுடன் எடுத்து நிறுத்தி வழிபாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம் என பொறியாளா் சு.ரவிகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com