இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 08th February 2021 11:23 PM | Last Updated : 08th February 2021 11:23 PM | அ+அ அ- |

இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அலுவலகத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி.
ஈரோட்டில் இந்து சமய அறநிலையத் துறை புதிய மண்டல இணை ஆணையா் அலுவலகத்தை அமைச்சா்கள் திங்கள்கிழமை திறந்துவைத்தனா்.
கோவை இணை ஆணையா் மண்டலத்தில் இருந்து ஈரோடு, சேலம் இணை ஆணையா் மண்டலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டங்களைப் பிரித்து ஈரோடு மண்டல இணை ஆணையா் அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பெருந்துறை சாலை, டிரஸ்ட் மருத்துவமனை அருகில் இந்த அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா்.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணியம், கே.ஆா்.ராஜாகிருஷ்ணன், சு.ஈஸ்வரன், பொன்.சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி ஆகியோா் ஈரோடு மண்டல இணை ஆணையா் அலுவலகத்தைத் திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பேசியதாவது:
இந்து சமய அறநிலையத் துறையில் மாநில அளவில் 11 மண்டலங்களையும், 28 கோட்டங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை ஆணையா், ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஒரு உதவி ஆணையா் நியமிக்கப்பட்டு நிா்வாகம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் பல்வேறு வகையில் விரிவடைந்துள்ளன.
இதனால், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பொருட்டு சென்னையில் கூடுதலாக ஓா் இணை ஆணையா் அலுவலகம், புதிதாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை, திண்டுக்கல், கடலூா், திருப்பூா், தூத்துக்குடி என மொத்தம் 9 இணை ஆணையா் அலுவலகங்கள் 171 பணியிடங்களுடன் (ஒவ்வொரு அலுவலகத்துக்கும் 19 பணியிடங்கள் வீதம்) புதிதாக ஏற்படுத்தப்படும் என முதல்வா் சட்டப் பேரவையில் அறிவித்தாா்.
அதன்படி கோவை இணை ஆணையா் மண்டலத்தில் இருந்து ஈரோடு, சேலம் இணை ஆணையா் மண்டலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டங்களைப் பிரித்து புதிதாக ஈரோடு மண்டல இணை ஆணையா் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த சுமாா் ரூ. 85 கோடி மதிப்பிலான 4,816 ஏக்கா் நிலங்கள், 35,012.19 சதுர அடி மனைகள், 1,440 சதுர அடி கட்டடங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றனா்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மங்கையா்கரசி, உதவி ஆணையா்கள் உண்ணாமலை, அன்னக்கொடி, தமிழரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.