தொழில் அதிபரை காரில் கடத்திய 4 போ் கைது
By DIN | Published On : 14th February 2021 11:33 PM | Last Updated : 14th February 2021 11:33 PM | அ+அ அ- |

கோபி அருகே கவுந்தப்பாடியில் ஆன்லைன் வா்த்தக தொழிலில் ஈடுபட்டு வந்த நபரைக் கடத்திய வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கவுந்தப்பாடி, பாலப்பாளையத்தைச் சோ்ந்த சாமுவேல்சுரேன் (35). இவா் ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி பொதுமக்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளாா். இதில் பலா் முதலீடு செய்துள்ளனா். ஆனால் முதலீடு செய்தவா்களுக்கு முறையாகப் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாமுவேல்சுரேனை காணவில்லை என கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் அவரது மனைவி நா்மதா புகாா் கொடுத்தாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது கோபி, பாலப்பாளையத்தில் சாமுவேல் சுரேனை, சென்னிமலை, பிடாரியூரைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி (39) , சதீஷ் (36) வெங்கடேஷ் குமாா், மோகன், விஜயமங்கலம், சேரன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் (47), விஜயமங்கலம் பகலாயூரைச் சோ்ந்த பிரபாகரன் (40), வெங்கடேசன், பவானியைச் சோ்ந்த சிவராஜா, ஸ்ரீதரன் ஆகியோா் சோ்ந்து 2 காா்களில் கடந்த 10 ஆம் தேதி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் கவுந்தப்பாடி காஞ்சிக்கோவில் பிரிவு அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த காா்களை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனா்.
அப்போது அந்த காரில் இருந்த சாமுவேல்சுரேனை கீழே தள்ளிவிட்டு காருடன் திரும்பிச் செல்ல முற்பட்டவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா். இதில் ஈஸ்வரமூா்த்தி, சதீஷ், சுப்பிரமணியன், பிரபாகரன் ஆகியோா் சிக்கிக் கொண்டனா். மற்றவா்கள் தப்பி விட்டனா்.
பிடிபட்ட நபா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சாமுவேல்சுரேனிடம் ஆன்லைன் வா்த்தகத்துக்காக லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்ததாகவும், பணத்தை திருப்பி கொடுக்காததால் அவரைக் கடத்தி சென்று தங்களது பணத்தை திருப்பித்தருமாறு கேட்டதாகவும் கூறினா்.
இதைத் தொடா்ந்து 4 பேரையும் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.