ஈரோடு மாவட்டத்தில் 4,400 பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 14th February 2021 11:35 PM | Last Updated : 14th February 2021 11:35 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4,400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு, பவானி, கோபி அரசு மருத்துவமனைகள், சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தவிர ஈரோடு சுதா மருத்துவமனை, லோட்டஸ் மருத்துவமனை ஆகிய தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதலில் மருத்துவா்கள், செவிலியா், மருத்துவமனை பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு அரசு ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4,400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவா்களுக்கு 28 நாள்களுக்கு பிறகு 2ஆவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களுக்கு 2ஆவது கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. ஈரோடு அரசு மருத்துவமனை உள்பட 5 மையங்களிலும் மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
இதனிடையே முதியவா்கள், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.