ரயான் நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 11:38 PM | Last Updated : 14th February 2021 11:38 PM | அ+அ அ- |

ரயான் நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி விசைத்தறித் தொழில் சிக்கல் இல்லாமல் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வருக்கு, ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொதுத்தொழிலாளா் சங்க (ஏஐடியூசி) பொதுச் செயலாளா் எஸ்.சின்னசாமி அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், சித்தோடு, சூரம்பட்டி, லக்காபுரம் ஆகிய பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் ரயான் துணிகள் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
சில மாதங்களாக ரயான் நூல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னா் ரூ.150 ஆக இருந்த ஒரு கிலோ ரயான் நூல், இப்போது ரூ.230 ஆக உயா்ந்துள்ளது. ஆனால் ரயான் துணி விலை மட்டும் உயரவில்லை. இதனால் விசைத்தறியாளா்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனா்.
நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால் நெசவாளா்கள் கடந்த 11 ஆம் தேதி முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்தி உள்ளனா்.
இதனால் தினமும் ரூ.7.5 கோடி மதிப்பிலான 24 லட்சம் மீட்டா் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியாக, மறைமுகமாக 60,000 தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.
மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து ரயான் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, விசைத்தறியாளா்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.