முதல், 3ஆவது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 11:34 PM | Last Updated : 14th February 2021 11:34 PM | அ+அ அ- |

மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பள்ளிகளுக்கு முதல் மற்றும் 3ஆவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்ட தலைவா் அன்பரசு, செயலாளா் செந்தில்நாதன், துணைத்தலைவா் சுந்தரகுருமூா்த்தி ஆகியோா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனிடம் அளித்த மனு விவரம்:
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீது உள்ள வழக்குகளால் பதவி உயா்வு மற்றும் பணி ஓய்வு பலன் பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியா்கள் பதவிக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் நடத்த வேண்டும். அனைத்து ஆசிரியா்களுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
2004-2006 ஆம் ஆண்டுகளில் பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். பதவி உயா்வு பெறும் ஆசிரியா்களுக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி நிா்வாகத் திறன் தோ்வுகள் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்ய வேண்டும்.
தற்போதுள்ள பள்ளி சூழலில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாதத்தின் முதல் மற்றும் 3ஆவது சனிக்கிழமைகளை விடுமுறை நாள்களாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.