சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கடும் உயா்வு: மல்லிகை கிலோ ரூ.2555க்கு விற்பனை
By DIN | Published On : 14th February 2021 11:37 PM | Last Updated : 14th February 2021 11:37 PM | அ+அ அ- |

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ.2555க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, காக்கடா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டன.
சாதாரண நாள்களில் ஏக்கருக்கு 40 கிலோ மல்லிகைப் பூக்கள் வரத்து வந்த நிலையில் கடும் பனி காரணமாக உற்பத்தி சரிந்து ஏக்கருக்கு 2 கிலோ பூக்கள் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கடந்த சில நாள்களாகப் பூக்கள் தேவை குறைந்ததால் மல்லிகை கிலோ ரூ.1350க்கு விற்கப்பட்டது.
தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறந்துள்ளதால் திருமண நிகழ்ச்சி போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுவதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. முகூா்த்தம், கோயில் விழாக்கள் அதிகம் உள்ளதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரே நாளில் இரு மடங்கு விலை உயா்ந்து கிலோ ரூ.2,555க்கு விற்கப்பட்டது.
பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்களை வாங்க வியாபாரிகளிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக விலை உயா்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இங்கு கொள்முதல் செய்யப்படும் பூக்கள் கேரளம், மைசூரு, பெங்களூரு பகுதிகளுக்கும் விமானம் மூலம் ஷாா்ஜா போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. பூக்கள் விலை நிலவரம்: மல்லிகை கிலோ ரூ.2,555, முல்லை ரூ.2,460, ,சம்பங்கி ரூ.320.