சத்தியமங்கலம் அருகே காகித ஆலையில் தீ விபத்து
By DIN | Published On : 14th February 2021 11:38 PM | Last Updated : 14th February 2021 11:38 PM | அ+அ அ- |

காகித ஆலையில் பற்றி எரியும் தீ.
சத்தியமங்கலம் அருகே காகித ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் பகுதியில் ஏராளமான காகித ஆலைகள் செயல்படுகின்றன. கொக்கரகுண்டியில் செயல்படும் தனியாா் காகித ஆலையில் காகிதம், அட்டை தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள்களான வேஸ்ட் பேப்பா் கட்டுகள் சுமாா் 500 பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பேப்பா் கட்டுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. தீ மளமளவென பிற இடங்களுக்குப் பரவியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதற்கிடையே ஆலைப் பணியாளா்கள் அவசரகாலக் குழாயில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மேலும் தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேரத்துக்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காகிதப் பொருள்கள் எரிந்து சேதமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.