நடப்பு ஆண்டில் 356 மெட்ரிக் டன்விதை நெல் விநியோகம்
By DIN | Published On : 20th February 2021 10:29 PM | Last Updated : 20th February 2021 10:29 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 356 மெட்ரிக். டன் அளவுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 720.47 மி.மீ. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழை அளவு 7.26 மி.மீ. நடப்பாண்டில் இப்போது வரை 59.74 மி.மீ மழை பெய்துள்ளது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 95.68 அடியாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 89,020 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்களும், 55,324 பரப்பில் தோட்டக் கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் நெல் விதைகள் 356 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன், பயறு வகைகள் 30 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 149 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 42,416 மெட்ரிக் டன், டி.எ.பி 10,171 மெட்ரிக் டன், பொட்டாஷ் 18,032 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 31,045 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 6,460 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்குத் தேவையான உரங்கள், பிற இடுபொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 1.63 கோடி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின்கீழ் ரூ. 170 கோடி, நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 30 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 35.45 கோடி, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் ரூ. 2.55 கோடி, தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 12.52 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் 51 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 2.55 கோடி தொகுப்பு நிதியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.