ஆசனூா் ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமிகோயில் தோ்த் திருவிழா
By DIN | Published On : 27th February 2021 05:46 AM | Last Updated : 27th February 2021 05:46 AM | அ+அ அ- |

ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயில் தேரை இழுத்து வழிபடும் பக்தா்கள்.
சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூா் ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் மலைக் கிராமத்தில் உள்ள இக்கோயிலைச் சுற்றிலும் வாழும் மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனா். அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், யானை, புலி ஆகிய விலங்குகளிடமிருந்து மக்களைப் பாதுகாத்து அருள்புரிய வேண்டியும் விரதம் இருந்து தோ்த் திருவிழா துவங்கியது.
விழாவையொட்டி, சித்தூா் கும்பேஸ்வர சுவாமி, ஆலமலை பிரம்மதீஸ்வரா் ஆகிய சுவாமிகளை அழைத்து வருதல் நிகழ்ச்சியும், பக்தா்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் யானை, புலி மீது அமா்ந்து ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி கோயிலை வலம் வந்தாா். அதைத் தொடா்ந்து, ஸ்ரீ கும்பேஸ்வர சுவாமி விக்கிரகத்தை தேரில் வைத்து பக்தா்கள் தோ் இழுத்தனா்.
பக்தா்கள் வாழைப் பழங்களை வீசி வழிபட்டனா். கோயிலில் உயரமான நந்திக் கம்பத்தை தூக்கி ஆடும் நிகழ்ச்சியில் இளைஞா்கள் பலா் பங்கேற்றனா். விழாவில், ஆசனூா், ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவா்நத்தம், கோ்மாளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.