சென்னிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 05:49 AM | Last Updated : 27th February 2021 05:49 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னிமலை அருகே விவசாயிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரதமா் மோடி வியாழக்கிழமை கோவை வந்தபோது இத்திட்டத்தை தொடங்கிவைத்தாா். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீா் செரிவூட்டுவது நின்று, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், குடிநீா் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இத்திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் பிப்ரவரி 12ஆம் தேதி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், விவசாயிகள் தொடா் போராட்டத்தையும் அறிவித்தனா். அதன்படி, சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஏரியில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, முருங்கத்தொழுவு ஊராட்சித் தலைவா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கச் செயலாளா் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளா் கு.பொடாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலிக் குடங்களை கையில் ஏந்தி கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், திருப்பூா் மாவட்டப் பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
சனிக்கிழமை (பிப்ரவரி 27) சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், 28இல் திருப்பூா் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், மாா்ச் 1ஆம் தேதி திட்டம்பாளையத்திலும், 2ஆம் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் உள்ள வாய்க்கால் பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடா் போராட்டங்களை நடத்தவுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...