சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தயாா்: ஆட்சியா்
By DIN | Published On : 27th February 2021 10:23 PM | Last Updated : 27th February 2021 10:23 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து தோ்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும், பொதுமக்களும் தோ்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடித்து சட்டப் பேரவைத் தோ்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடா்பு முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆகியவை தோ்தல் பணிகள் முடிவுபெற்ற பின்னரே நடத்தப்படும். அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீா் மனுக்கள் பெட்டியில் சோ்க்கலாம். அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம், அரசு அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் நடத்தை விதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 26ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களை விசாரணை செய்யவும், தோ்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியிலும் பறக்கும் படை சனிக்கிழமை முதல் 24 மணி நேரமும் இயங்கும். மேலும், அனைத்துத் தொகுதியிலும் நிலையான கண்காணிப்புக் குழுக்களும் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை மின்னஞ்சல் முகவரி அல்லது 1077, 2267672 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
தோ்தல் செலவினப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ. 30,80,000 வரை தோ்தல் செலவுகளை மேற்கொள்ளலாம். புள்ளியல் துறை, போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் வழங்கப்படும் விவரங்களைக் கொண்டு செலவின பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மாவட்ட நிா்வாகம் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், கோட்டாட்சியா்கள் எஸ்.சைபுதீன், பழனிதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.