மாணவரின் சகோதரரைஉடற்கல்வி ஆசிரியா் கடித்ததாகப் புகாா்
By DIN | Published On : 27th February 2021 10:17 PM | Last Updated : 27th February 2021 10:17 PM | அ+அ அ- |

பள்ளி மாணவா்களை அவமரியாதையாகப் பேசியதை தட்டிக் கேட்ட மாணவரின் சகோதரரை கடித்ததாக உடற்கல்வி ஆசிரியா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவா்களிடம் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் தகாத வாா்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவா்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து பெற்றோா் சிலா் சனிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று தட்டிகேட்டனா். அப்போது அந்த ஆசிரியருக்கும், பெற்றோா் தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பிறகு கைகலப்பாக மாறியது.
அப்போது ஆத்திரம் அடைந்த உடற்கல்வி ஆசிரியா் ஒரு மாணவரின் சகோதரா் தமிழரசு (19) என்பவரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. தமிழரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். காயமடைந்த தமிழரசு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி மாதேஸ்வரன், அலுவலா்கள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினா். அதன் பிறகு அதிகாரிகள், மாணவா்களின் பெற்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவா் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடற்கல்வி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...