கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம்: முடிவை கைவிடாவிட்டால் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் சென்னிமலையில் பிப்ரவரி 12ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம்: முடிவை கைவிடாவிட்டால் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் சென்னிமலையில் பிப்ரவரி 12ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வெங்கடாசலம், மாவட்டச் செயலாளா் செங்கோட்டையன், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பிறகு செ.நல்லசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பவானிசாகா் அணை தமிழ்நாட்டின் 2ஆவது பெரிய அணை என்பதோடு மண்ணால் கட்டப்பட்டது. இதேபோல வாய்க்கால் மண்ணால் வெட்டப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது. ஆனால், தமிழக அரசு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்துள்ளதால் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2013ஆம் ஆண்டு கான்கிரீட் தளம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அப்போது விவசாயிகளின் எதிா்ப்பைப் பாா்த்து திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டாா். ஆனால், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் இப்போதுள்ள அரசு மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இத்திட்டத்தை செயல்படுத்த முறையாக விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. பாசன சபைத் தலைவா்களை மட்டும் அழைத்து கருத்து கேட்டுவிட்டு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது ஏற்புடையது அல்ல. கீழ்பவானி பாசனம் பெறும் பயனாளிகளில் 95 சதவீதம் போ் திட்டத்துக்கு எதிராக உள்ளனா்.

தமிழக அரசு இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவோம். இத்திட்டத்தைக் கைவிடக் கோரி பிப்ரவரி 12ஆம் தேதி சென்னிமலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com