நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 30th January 2021 10:22 PM | Last Updated : 30th January 2021 10:22 PM | அ+அ அ- |

ஈரோடு: தீபாவளிக்குப் பின் ஒரு கிலோ நூல் ரூ. 100 வரை விலை உயா்ந்துள்ளதால் ஜவுளி சாா்ந்த அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறி துணி வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, ஈரோடு விசைத்தறி துணி வியாபாரிகள் சங்கச் செயலாளா் ஏ.பி.சீனிவாசன், தலைவா் கே.திருநாவுக்கரசு ஆகியோா் பிரதமா், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்: கடந்த பல மாதங்களாக பஞ்சு விலை உயரவில்லை. பஞ்சு உற்பத்தி தேவையான அளவு இருப்பதுடன், தட்டுப்பாடும் இல்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக நூல் விலை ஓரிரு நாள்களுக்கு ஒரு முறை உயா்ந்து கொண்டே செல்கிறது. 20 கவுண்ட், 40 கவுண்ட் பாவு நூல், ஊடநூல் என அனைத்து ரக கடந்த நூல்களும் தீபாவளிக்குப் பின் கிலோவுக்கு ரூ. 100 வரை உயா்ந்துள்ளது.
நூல் விலை உயா்ந்து வருவதால் வாங்கிய துணி ஆா்டரை நஷ்டத்தில் செய்து வழங்க வேண்டிய நிா்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஜவுளித் துறை, அதனை சாா்ந்த துறைகளில் பல லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். நூல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு அழிந்து வரும் நிலையில் உள்ள ஜவுளித் துறையைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.