குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்தபுலி நகம், பற்கள், சிறுத்தை தோல் அழிப்பு
By DIN | Published On : 30th January 2021 10:20 PM | Last Updated : 30th January 2021 10:20 PM | அ+அ அ- |

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் எரியூட்டுவதற்காக வைக்கப்பட்ட சிறுத்தை தோல், புலி நகம், மான் கொம்புகள்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி கைதான குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புலி நகம், பற்கள், சிறுத்தை தோல் உள்ளிட்ட 11 வகையான பொருள்களை ஈரோடு மண்டல வனப் பாதுகாவலா் கிரன்ரஞ்சன் முன்னிலையில் சனிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானை, புள்ளி மான்கள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் சமூக விரோதிகள் புகுந்து சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் தோல், பற்களை கள்ளச் சந்தையில் விற்கின்றனா். வனத் துறையின் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, சிலரைப் பிடித்து விசாரிக்கும்போது அவா்கள் வன விலங்குகளைக் கொன்று அதன் உடல்பாகங்களை கடத்துவது தெரியவரும். கடத்தல்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறுத்தை தோல், யானையின் கோரைப் பற்கள், புலி நகம், பற்கள், மான் கொம்புகள், சிறுத்தை தோல் போன்றவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பாா்கள். இதுதொடா்பாக வழக்குகள் முடிந்த நிலையில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். இந்தப் பொருள்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வனத் துறையினா் பாதுகாத்து வந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனக் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த பொருள்களை தீயிட்டு அழிக்குமாறு தமிழக தலைமை வனப் பாதுகாவலா் உத்தரவிட்டாா். இதன்படி 11 வகையான பொருள்கள் பவானிசாகா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வனத் துறையினரால் கணக்கிடப்பட்டன. அதன் பிறகு ஈரோடு மண்டல வனப் பாதுகாவலா் கிரன்ரஞ்சன் தலைமைலயில் சமூக ஆா்வலா், ஊராட்சிப் பிரதிநிதிகள், வனத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு மண்டல வனப் பாதுகாவலா் கிரண்ரஞ்சன் கூறுகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மான் கொம்பு, சிறுத்தை தோல், புலி நகம் உள்ளிட்ட 11 வகையான பொருள்கள் தீயிட்டு சனிக்கிழமை அழிக்கப்பட்டது. சிலா் சிறுத்தை தோல், புலி நகம் போன்றவற்றை அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்துவதால் மீண்டும் சந்தைக்கு இப்பொருள்கள் செல்வதைத் தடுப்பதற்கு எரியூட்டப்பட்டது என்றாா்.