கா்நாடகத்தில் இருந்து மது கடத்தல்: திம்பம் மலைப்பாதையில் சோதனை தீவிரம்
By DIN | Published On : 02nd July 2021 06:00 AM | Last Updated : 02nd July 2021 06:00 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் இருந்து மது பாட்டில்கள் அதிக அளவில் கடத்தப்படுவதால் திம்பம் மலைப் பாதையில் ஆசனூா் போலீஸாா் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில்லை. இதனால் கா்நாடகத்தில் இருந்து அதிக அளவில் மதுபானங்கள் கடத்தப்படுவதால் தமிழக, கா்நாடக மாநில எல்லையில் பண்ணாரி, ஆசனூா், திம்பம் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் காவல் உட்கோட்டத்தில் கடந்த 20 நாள்களில் சுமாா் 150 வாகனங்களில் 12 ஆயிரம் கா்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே அண்மையில் இரு மாநில எல்லையில இருந்து கடம்பூா் வனத்தில் வழியாக இருசக்கர வாகனத்தில் சுமாா் 400 கா்நாடக மதுபாட்டில்கள் கடத்தியதாக வேட்டைத்தடுப்புக் காவலா்கள் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
வனத் துறையின் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வாகனச் சோதனைக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இந்தக் கடத்தில் எதிரொலியாக வியாழக்கிழமை வேட்டைத் தடுப்பு காவலா்களையும் போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.
திம்பம் மலைப் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசனூா் வேட்டைத்தடுப்பு காவலா்களை தடுத்து நிறுத்திய ஆசனூா் போலீஸாா், அவா்களை சோதனையிட்டு பைகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து வந்த வனத் துறை வாகனங்களையும் சோதனையிட்டனா்.