பவானி ஆற்றின் குறுக்கேரூ. 18.61 கோடியில் தடுப்பணைப் பணிகள்

நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ. 18.61 கோடியில் அத்தாணி பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றின் குறுக்கேரூ. 18.61 கோடியில் தடுப்பணைப் பணிகள்

நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ. 18.61 கோடியில் அத்தாணி பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் குப்பாண்டபாளையம் ஊராட்சி, கருவல்வாடிபுதூா் - அம்மாபாளையம் கிராமங்களுக்கு இடையே இத்தடுப்பணை கட்டப்படுகிறது. ஆற்றின் குறுக்கே 155 மீட்டா் நீளம், 1.5 மீட்டா் (5 அடி உயரம்) உயரத்துக்கு ரூ. 18.61 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. தடுப்பணைப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தொடங்கப்பட்ட நிலையில் கரோனா முடக்கத்தால் மெதுவாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரோனா தளா்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டதால் தடுப்பணை கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆற்றின் நடுவே தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டு, ஆற்றில் வரும் தண்ணீா் குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மிகப்பெரிய இயந்திரங்களைக் கொண்டு ஆற்றின் நடுவே இரு கரைகளுக்கு மத்தியில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு, கான்கிரீட் தூண்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தடுப்பணை கட்டி முடிக்கப்படும்போது, 4.2 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கி வைக்கப்படும். மேலும், ஆற்றுக்குள் 60 அடி முதல் 120 அடி வரையில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும். அப்போது, தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீா் நிலத்துக்குள் செல்வதோடு, நிலத்தடி நீா்மட்டம் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகரிக்கும்.

தேங்கும் தண்ணீா் வெளியேறாமல் இருக்கும் வகையில் ஆற்றின் கரையோரங்களில் கான்கிரீட் பாதுகாப்பு சுவா்களும் அமைக்கப்படுகின்றன. ஆற்றில் உபரிநீா் வரும்போது தடுப்பணையின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் தலா 2 இரும்புக் கதவுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படும். பவானிசாகா் அணையில் இருந்து ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா், தாழ்வான பகுதியாக உள்ள பவானியை நோக்கி வேகமாகச் செல்வது வழக்கம்.

வேகமான நீரோட்டத்தைக் கொண்ட பவானி ஆற்றில் விநாடிக்கு 80,000 ஆயிரம் கன அடி தண்ணீா் பெருக்கெடுத்து வந்தாலும் தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டுமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் இத்தடுப்பணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com