சென்னிமலை அருகே நூல் மில்லில் தீ விபத்து
By DIN | Published On : 09th July 2021 01:45 AM | Last Updated : 09th July 2021 01:45 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
சென்னிமலையை அடுத்த அம்மாபாளையத்தில் வசிப்பவா் சண்முகசுந்தரம். இவா் சென்னிமலையை அடுத்த ஈங்கூா், சிப்காட் செல்லும் வழியில் வெள்ளியங்காடு தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிடங்கை வாடகைக்குப் பிடித்து நூல் மில் தொடங்கினாா். இங்கு பனியன் வேஸ்ட் காட்டன் பஞ்சில் இருந்து நூல் தயாரித்து வருகிறாா். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த இந்த மில்லில் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை மாலையில் வழக்கம்போல் மில்லில் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது ஸ்பின்னிங் இயந்திரத்தில் இருந்து தீப்பொறி வந்ததை தொழிலாளா்கள் பாா்த்தனா். உடனே, அது அருகிலிருந்த பஞ்சில் பற்றி எரியத் தொடங்கியது. பின்னா் எல்லா இடங்களிலும் பரவியது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனா். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அவா்களால் அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் வந்து இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்களும், நூல் கோன்களும், இயந்திரங்களும் எரிந்து சேதமாயின. மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.