அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்ததில் சந்தை வியாபாரத்துக்கு வந்த மூவர் பலி
By DIN | Published On : 19th July 2021 08:49 AM | Last Updated : 19th July 2021 08:53 AM | அ+அ அ- |

இடிந்து கட்டடம்.
அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் வாரச்சந்தையில் வியாபாரத்துக்கு வந்த பர்கூர் மலைமக்கள் மூவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர். மேலும், மூவர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச்சந்தை திங்கள்கிழமை கூடும் நிலையில், பர்கூர் மலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமை இரவே வந்து ஆங்காங்கே உள்ள கடைகள், சாலையோரங்களில் படுத்து உறங்குவது வழக்கம். இந்நிலையில், விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய வந்த மலைமக்கள், அந்தியூர் தேர்வீதியில் உள்ள ராஜசேகர் (62) என்பவரின் கடையின் முன்பாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
இக்கட்டடம் பழுதடைந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென முன்பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த 6 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களின் கூக்குரல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். அந்தியூர் தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் பொதுமக்கள உதவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய பர்கூர், தட்டக்கரை மேலூரைச் சேர்ந்த சித்தன் (55), பர்கூர் சின்ன செங்குளத்தைச் சேர்ந்த மாதேவன் (55), இதே பகுதியைச் சேர்ந்த தொட்டைய தம்படி மகன் சின்ன பையன் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பர்கூர் சின்ன செங்குளம் ராஜேஷ் (30), மகேந்திரன் (17), கொங்காடை சிவமூர்த்தி (45) ஆகியோர் காயங்களுடன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் பவானி காவல்துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தை வியாபாரத்துக்கு வந்த மூவர் கட்டடம் இடிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.