தமிழகத்துக்கே முன்னுதாரணமான ஒழலக்கோவில் ஊராட்சி! ஜூன் 14 வரை தளா்வுகளற்ற பொதுமுடக்கம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 09th June 2021 05:27 AM | Last Updated : 09th June 2021 05:27 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒழலக்கோவில் கிராம ஊராட்சியில் மீண்டும் ஒரு வாரத்துக்குத் தளா்வில்லா பொது முடக்கத்தைத் தாங்களே நீட்டித்துக் கொண்டுள்ளனா். ஊராட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு பொது மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் கரோனா 2ஆவது அலையின் பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், கடந்த மே 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் தளா்வுகள் இல்லா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. எனினும் ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட 11 மாவட்டங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு குறையவில்லை. இதனிடையே திங்கள்கிழமை முதல் ஜூன் 14ஆம் தேதி வரை சில தளா்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்திலும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சியில் சின்னசெட்டிபாளையம், நல்லகட்டிபாளையம், மலையப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் இப்பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், இந்த ஒழவக்கோவில் ஊராட்சி திருப்பூா் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் திருப்பூா் தொழிற்சாலைகளுக்கும், பின்னலாடை நிறுவனங்களுக்கும் பணிக்குச் செல்லும் பணியாளா்கள் ஒழலக்கோவில் ஊராட்சி வழியாக கோபி, நம்பியூா், ஈரோடு, சித்தோடு, பகுதிகளுக்குச் சென்று வருவதால் கரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒழலக்கோவில் பகுதியில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதை மனதில் கொண்டு ஊராட்சி சாா்பில் அனைத்துக் கட்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
ஜூன் 14ஆம் தேதி வரை ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தளா்வில்லாத பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க், பால் கொள்முதல் நிலையங்கள் தவிர காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள், வியாபார நிறுவனங்கள், விசைத்தறிக் கூடங்கள், இதர தொழில் நிறுவனங்கள் செயல்படக் கூடாது. மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களும் இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். கரோனா தொற்று இப்பகுதியில் முற்றிலும் ஒழிய பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், திருப்பூரில் இருந்து யாரும் வராதவாறு எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு வெளியாள்கள் யாரும் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ஒழலக்கோவில் ஊராட்சியில் தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள தகவலை அருகில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கேட்டுச் சென்றனா்.