ரூ. 30 லட்சம் செலவில் அணுகு சாலை: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 09th June 2021 11:20 PM | Last Updated : 09th June 2021 11:20 PM | அ+அ அ- |

சாலைப் பணிகளை ஆய்வு செய்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.
சித்தோடு பகுதியில் ரூ. 30 லட்சம் செலவில் அணுகு சாலை அமைக்கும் பணிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு மாவட்டத்தில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறைகளின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்ட மக்களின் 15 ஆண்டுகால போக்குவரத்து சிரமம் குறித்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அப்பணிகளை மேற்கொள்ள அமைச்சா் சு.முத்துசாமி உத்தரவிட்டாா். அதன்படி, சித்தோடு பகுதியில் கோவையில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழி சாலையை ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையுடன் இணைக்க, 850 மீட்டா் நீளத்தில் 5.5 மீட்டா் அகலத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.