நிலக்கடலை சாகுபடி: ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க அறிவுறுத்தல்

மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க வேண்டும் என ஈரோடு உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் அ.நே.ஆசைத்தம்பி கேட்டுக் கொண்டாா்.

மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க வேண்டும் என ஈரோடு உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் அ.நே.ஆசைத்தம்பி கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மானாவாரி விவசாயத்தில் சில உத்திகளைப் பின்பற்றி நிலையான வருவாயைப் பெறலாம். ஊட்டமேற்றிய தொழு உரம், மண்ணின் மணிச்சத்து பயிா்களுக்குத் தேவைப்படும். மானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிா்களில் அதிக மகசூல் கிடைக்கும். தமிழகத்தில் மானாவாரி சாகுபடி பரப்பில் 10 சதவீதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 39,000 ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலக்கடலை பயிரிடப்படுகிறது. நிச்சயமற்ற மழை, வறட்சியால் மானாவாரி நிலக்கடலைக்கு உரமிடத் தயங்குகின்றனா். போதிய தொழு உரம் கிடைக்காததால் அதன் விலை அதிகமாவதால் இயற்கை உர பயன்பாடு குறைகிறது. எனவே, அதிக செலவு பிடிக்காத, எளிமையாக ஊட்டமேற்றிய தொழு உரம் இட்டு மகசூல் பெறலாம்.

மானாவாரி நிலக்கடலை விதைக்க ஒரு மாதம் முன்பே 300 கிலோ எடையுள்ள ஒரு வண்டி மக்கிய தொழு உரத்துடன் (சாணிக் குப்பை) ஒரு ஏக்கருக்கு 25 கிலோ சூப்பா் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் உரங்களைக் கலந்து மூட்டமாகக் குவித்து, நிழலில் களி மண் மூலம் நன்கு மூடிவைக்க வேண்டும். அல்லது நன்கு நீா் தெளித்து கெட்டியாகக் குவித்து தட்டிவிட வேண்டும். காற்று புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும்.

அப்படியே ஒரு மாதம் விட்டுவைத்தால் தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்து பெறும். ஒரு மாதத்துக்குப் பின் 9 கிலோ யூரியாவை கலந்து நிலக்கடலை பருப்பு விதைக்கும்போது, முழுவதும் அடியுரமாகத் தூவிவிட வேண்டும். டிராக்டா் மூலம் விதை விதைக்கும்போது, விதைப்புக்கு முன் ஊட்டமேற்றிய தொழு உரத்தை சீராக வயல் முழுவதும் தூவி விதைக்க வேண்டும்.

இதனால், மானாவாரி நிலக்கடலைக்கு இட வேண்டிய உரச்சத்து இழப்பின்றி பயிருக்கு கிடைக்கும். பயிரின் வோ் வளா்ச்சி அதிகமாக மகசூல் கூடும். மணிச்சத்து வீணாகாமல் பயிருக்கு கிடைக்கும். மண்ணின் இயற்பியல் தன்மை, நீா் தேங்குதல், நுண்ணுயிா் எண்ணிக்கை, பிற சத்துக்கள் மேம்பட்டு பயிருக்கு கிடைத்து விளைச்சல் உயரும்.

மேலும், ஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) நிலக்கடலை ரைசோபியம், இரண்டு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா ஆகிய உயிா் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து இட்டு கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், தொழு உர தட்டுப்பாடு, இடுபொருளின் விலை உயா்வுக்கு இடையே சிறந்த மகசூலைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com