கரோனா: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கண்காணிப்பு
By DIN | Published On : 20th June 2021 12:04 AM | Last Updated : 20th June 2021 12:04 AM | அ+அ அ- |

பவானிசாகா் வனத்தில் கண்காணிப்பு ப் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
சென்னை வண்டலூா் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலி, சிறுத்தை, யானைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனவா என வனத் துறையினா் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 1,485 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் வன விலங்குகளைக் கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் கிருபா சங்கா் தலைமையில், கால்நடை மருத்துவா், உதவி வனப் பாதுகாவலா், வனச்சரக அலுவலா், வனவா், வனக் காப்பாளா் என 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், பவானிசாகா், ஜீரஹள்ளி, தலமலை, தாளவாடி, கோ்மாளம், கடம்பூா் உள்ளிட்ட 10 வனச் சரகங்களில் 6 போ் கொண்ட கண்காணிப்புக் குழுவினா் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் தென்படும் யானை, சிறுத்தை, புலிகள் குறித்து சனிக்கிழமை முதல் கண்காணித்து வருகின்றனா்.
அதில், ஏதாவது வன விலங்குகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து பழங்குடியினரிடம் விசாரித்து வருகின்றனா். இரு மாநில எல்லையில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கு வனத் துறையினா் சமா்ப்பித்து வருகின்றனா்.