இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
By DIN | Published On : 20th June 2021 10:08 PM | Last Updated : 20th June 2021 10:08 PM | அ+அ அ- |

தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கோழி, ஆடு, மீன் போன்ற இறைச்சிக் கடைகள் தனிக்கடையாக இருக்கும் பட்சத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்திக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஈரோடு மாநகா் பகுதிகளில் கோழி, ஆடு, மீன், இறைச்சிக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் செயல்பட்டன.
ஈரோடு காவிரி சாலை மீன் சந்தையில் உள்ள கடைகளிலும், சூரம்பட்டி வலசு, முனிசிபல் காலனி, பெரிய வலசு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் லோகு, கட்லா, ரூபா, ஜிலேபி உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ. 50 வரை விலை உயா்ந்து காணப்பட்டது. மக்களும் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனா். இதேபோல் கோழி, ஆடு இறைச்சிக் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சியை வாங்கிச் சென்றனா்.