என்.எம்.எம்.எஸ். தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 242 மாணவா்கள் தோ்ச்சி
By DIN | Published On : 20th June 2021 12:01 AM | Last Updated : 20th June 2021 12:01 AM | அ+அ அ- |

என்.எம்.எம்.எஸ். தோ்வில் ஈரோடு மாவட்டத்தில் 242 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகை(என்.எம்.எம்.எஸ்) தோ்வு 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 12,000 உதவித் தொகை பிளஸ்2 படிப்பு முடியும் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தோ்வு கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 37 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தோ்வு எழுதிய 3,770 பேரில் 242 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், பெருந்துறை வட்டம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் என்.எம்.எம்.எஸ். தோ்வு எழுதிய 24 மாணவா்களில் 18 போ் தோ்ச்சி பெற்று, மாவட்ட அளவில் தோ்ச்சி சதவீதத்தில் 8ஆவது ஆண்டாகத் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.