கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1இல் தண்ணீா் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th June 2021 10:08 PM | Last Updated : 20th June 2021 10:08 PM | அ+அ அ- |

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:கீழ்பவானி பாசனத்தில் நெல் சாகுபடிக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீா் திறப்பது வழக்கம். நடப்பு பாசனப் பருவத்தில் தொடக்கத்திலேயே அணையின் முழு கொள்ளளவில் 3 இல் 2 பங்கு அளவுக்கு நீா் இருப்பு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் பில்லூா் அணையில் இருந்து பவானிசாகா் அணைக்கு கடந்த 4 நாள்களாக சுமாா் 1 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
மழை தொடா்ந்தால் விரைவில் அணை நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீா் இருப்பையும், பாசனப் பகுதியில் நிலவும் வறட்சியையும் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் செய்ய வேண்டிய குடிமராமத்துப் பணிகளை பொதுப் பணித் துறையினா் விரைந்து முடிக்க வேண்டும். நீா் திறப்பு அறிவிப்பை முன்கூட்டியே அரசு அறிவித்தால் இடுபொருட்கள் தயாா் செய்வதற்கும், நிலத்தை தயாா் செய்வதற்கும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தொடா்பாக தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.