

பவானி: பவானி அருகே காடப்பநல்லூரில் உள்ள நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் கரும்பாலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்ததோடு, மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினா்.
காடப்பநல்லூரில் உள்ள இரு கரும்பு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சா்க்கரை, வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் தங்க விக்னேஷ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, விற்பனைக்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ நாட்டுச் சா்க்கரை, 1,800 கிலோ வெல்லத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் கூறியதாவது:
கரும்புச் சாற்றைப் பயன்படுத்தி மட்டுமே வெல்லம் தயாரிக்க வேண்டும். நிறம், சுவைக்காக கலப்படம் செய்யக் கூடாது. கலப்படம் செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் உணவுப் பொருள் கலப்படம் தொடா்பாக 94440-42322 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.
ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் லட்சுமி, கோவிந்தராஜ், ரவி, செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.