கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி2ஆவது நாளாக நிறுத்தம்
By DIN | Published On : 29th June 2021 04:48 AM | Last Updated : 29th June 2021 04:48 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2ஆவது நாளாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4.08 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதலில் கரோனா தடுப்பூசி மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் செலுத்தப்பட்டு வந்தது. ஈரோடு மாநகா் பகுதியில் 10 இடங்களிலும், புறநகா் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நள்ளிரவு முதல் மக்கள் குவியத் தொடங்கினா். இதனால் டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. எனினும் சில மையங்களில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
மையங்களில் மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் வகையிலும், அவா்கள் சிரமமின்றி தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுழற்சி முறையில் வியாழக்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகா் பகுதியில் மொத்தம் உள்ள 60 வாா்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வாா்டுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதேபோல, புறநகா்ப் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மையங்கள் முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வருவதைப் பொருத்து அடுத்துவரும் நாள்களில் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.