பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 12th March 2021 02:01 AM | Last Updated : 12th March 2021 02:01 AM | அ+அ அ- |

பெருந்துறை: பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் எஸ்.ஜெயகுமாா் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது குறித்த தகவலறிந்த தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஆதரவு அதிமுக தொண்டா்கள் பெருந்துறை அண்ணா சிலை அருகில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பெருந்துறை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமாரை மாற்ற வேண்டும் என்றும், தற்போதைய எம்.எல்.ஏ.வான தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்துக்கே மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து கட்சியின் தலைமை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஈரோடு புறநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். துணைச் செயலாளா் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பேரூா் செயலாளா்கள் பழனிசாமி, பெரியசாமி, துரைசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டம் காரணமாக பெருந்துறை - சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G