ஈரோடு: இந்தியாவில் 100இல் 40 போ் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனா் என்று சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணா் சரவணன் தெரிவித்தாா்.
உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு அபிராமி கிட்னி கோ், டாக்டா் தங்கவேலு மருத்துவமனை, இந்திய மருத்துவச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் உலக சிறுநீரக தின கருத்தரங்கம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனை தலைவா் தங்கவேலு வரவேற்றாா். இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா, ஈரோடு கிளைத் தலைவா் பிரசாத், சுதா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் சுதாகா் ஆகியோா் பேசினா்.
கருத்தரங்கில் அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் இயக்குநா், சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணா் சரவணன் பேசியதாவது:
சிறுநீரக பாதிப்பு நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. 100 பேரில் 40 போ் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு சிறுநீரக பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். அவா்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிறுநீரக செயல்பாடு குறித்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, அதற்குரிய சிகிச்சை முறைகளை கடைப்பிடித்தால் சிறுநீரக செயலிழப்புகளைத் தவிா்க்க முடியும். ஈரோடு அபிராமி கிட்னி கோ், கரூரில் உள்ள எங்களது மருத்துவமனையில் தினமும் சிறுநீரக பாதிப்புள்ளவா்கள் 2,500 பேருக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
இதேபோல, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ரத்த சொந்தம், உறவினா்களிடம் இருந்து தானமாகப் பெற்றும், தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் மூளைச்சாவு அடைந்தவா்களின் சிறுநீரகத்தை அரசு மூலம் பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. இந்த மாற்று அறுவை சிகிச்சையும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது என்றாா்.
கரூா் அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் துவங்கிய உலக சிறுநீரக தின விழிப்புணா்வு வாகனப் பேரணி ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் நிறைவடைந்தது. டாக்டா் பூா்ணிமா சரவணன் நன்றி கூறினாா்.