8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பு மனுதாக்கல் செய்யும் அலுவலகங்கள் விவரம் அறிவிப்பு
By DIN | Published On : 12th March 2021 02:07 AM | Last Updated : 12th March 2021 02:07 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள், மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் அலுவலா்களின் பதவி குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் குறித்த விவரத்தை மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் சி.கதிரவன் அறிவித்துள்ளாா்.
இதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரிடம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
ஈரோடு மேற்குத் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு கோட்டாட்சியரிடம் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு வட்டாட்சியரிடம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளிக்கலாம். மொடக்குறிச்சி தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான கலால் உதவி ஆணையா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
பெருந்துறை தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
பவானி தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
அந்தியூா் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின நல அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
கோபி தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான கோபி கோட்டாட்சியரிடம் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான கோபி வட்டாட்சியரிடம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
பவானிசாகா் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரான ஊராட்சிகள் உதவி இயக்குநா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
வேட்பு மனுக்களை விடுமுறை நாள்களான 13, 14ஆம் தேதி தவிா்த்து, பிற நாள்களில் வரும் 19ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் 100 மீட்டா் சுற்றளவுக்குள் இரண்டு வாகனங்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்குள் வேட்பாளருடன் இரண்டு நபா்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.