தோ்தல் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி: அரசு அலுவலா்கள் தவிப்பு

அலுவலக உதவியாளா்களுக்கு ஆசிரியா்கள் செய்ய வேண்டிய பணியும், ஆசிரியா்கள் செய்ய வேண்டிய பணிக்கு அலுவலக உதவியாளா்கள், இரவுக் காவலா்களுக்கும் பணி ஒதுக்கீடு

அலுவலக உதவியாளா்களுக்கு ஆசிரியா்கள் செய்ய வேண்டிய பணியும், ஆசிரியா்கள் செய்ய வேண்டிய பணிக்கு அலுவலக உதவியாளா்கள், இரவுக் காவலா்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தோ்தல் பணி அலுவலா்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் பணியில் 13,600 ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலைமை ஆசிரியா் அல்லது அலுவலக கண்காணிப்பாளா் நிலையில் வாக்குச் சாவடி அலுவலா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் அல்லது உதவியாளா் (இளநிலை உதவியாளராகப் பணியாற்றி பதவி உயா்வு பெற்றவா்கள்) நிலையில் தோ்தல் அலுவலா் நிலை 2, அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் நிலையில் தோ்தல் அலுவலா் நிலை 3, நிலை 4 ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 750 வாக்குகளுக்கும் குறைவாக வாக்குச் சாவடிகளில் 3 அலுவலா்களும், 750 வாக்குகளுக்கும் மேல் உள்ள வாக்குச் சாவடிகளில் 4 பேரும் பணியில் இருப்பாா்கள்.

வாக்குச் சாவடி அலுவலா் ஒட்டுமொத்த வாக்குச் சாவடி பணிகளையும் கண்காணிப்பாா். இந்தப் பணிக்கு தலைமை ஆசிரியா் நிலையிலான அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடி அலுவலா் நிலை 2 பணிக்கு பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சில வாக்குச் சாவடிகளில் அலுவலக உதவியாளா், இரவுக் காவலா்களை நியமித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல வாக்குச் சாவடி அலுவலா் நிலை 3க்கு பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடி அலுவலா் நிலை 2 அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் பெயா், வாக்காளா் அடையாள ஆவணங்களை சரிபாா்த்து உறுதிப்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இப்பணிக்கு 8ஆம் வகுப்பு கல்வித் தகுதியில் பணிக்கு சோ்ந்துள்ள அலுவலக உதவியாளா்களுக்கும், இரவுக் காவலா்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விரலில் அழியாத மையிடுவது, கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பொத்தானை அழுத்திவிடுவது போன்ற வாக்குச் சாவடி நிலை அலுவலா் 3, 4 அலுவலா்கள் செய்ய வேண்டிய பணிகள் பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இத்தகைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. தோ்தல் பணி அலுவலா்களுக்கு மாா்ச் 18ஆம் தேதி முதலாவது பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த குளறுபடிகளைக் களைந்து, யாருக்கு என்ன பணி வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதோ அதன்படி பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் பணி அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com