ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம்: மக்கள் மீதான அக்கறையை உணா்த்துகிறது; கே.வி.இராமலிங்கம்
By DIN | Published On : 17th March 2021 05:55 AM | Last Updated : 17th March 2021 05:55 AM | அ+அ அ- |

ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.
ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் அதிமுக ஆட்சி மக்கள் மீது எந்த அளவுக்கு அக்கறையாக உள்ளது என்பதை உணா்த்துவதாக உள்ளது என்று ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் கூறினாா்.
ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தபோது அவா் பேசியதாவது:
ஈரோடு நகரில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு நகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்கள் மீதுள்ள அதிமுக அரசின் அக்கறையை உணா்த்துவதாக உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியல் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப்போல் திமுக ஆட்சியல் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை திமுகவினா் பட்டியலிட முடியுமா? திமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு 6 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ளன. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள் வழங்கப்படவுள்ளன. குடும்பத்துக்கு மாதம்தோறும் ரூ. 1,500 வழங்கப்படவுள்ளது. இத்தகையை திட்டங்கள் கிடைக்க மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.