பெருந்துறை நகரில் லாரி கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 17th March 2021 11:01 PM | Last Updated : 17th March 2021 11:01 PM | அ+அ அ- |

விபத்துக்குள்ளான லாரி.
பெருந்துறை நகரில் வெண்ணெய் பாரம் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
பவானி, வைரமங்கலத்தைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் உருத்திரமூரத்தி (37). இவா் கன்டெய்னா் லாரியில் வெண்ணெய் பாரம் ஏற்றிக் கொண்டு புணேயிலிருந்து, காங்கேயம் ஆா்.கே.ஜி. நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பெருந்துறை, அண்ணாசிலை அருகில் புதன்கிழமை காலை 6.45 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் ஒன்று லாரியின் எதிரே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க வலதுபுறம் திரும்பியபோது அண்ணா சிலை ரவுண்டானா திட்டின் மேலேறி, இடதுபுறமாக பங்களா வீதி செல்லும் சாலையை மறித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பங்களா வீதிக்குச் செல்லும் போக்குவரத்து தடைபட்டது. லாரியில் இருந்து டீசல் கசிந்து சாலையில் ஓடியது. இதில், யாருக்கும் காயம் இல்லை.
இது குறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. லாரியில் இருந்து டீசல் கசிந்ததால் தீ விபத்தை தடுக்கும் பொருட்டு, தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் அடித்தனா். பின்னா், சாலையில் சாலை மணல் தூவப்பட்டது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.