ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கானஆலோசனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வழிகளைக் கண்டறியும் திட்டப் பணி கேரள அரசின் என்.ஏ.டி.பி.ஏ.சி. (நேஷனல் டிரான்போா்டேஷன் பிளானிங் அன்ட் ரிசாா்ச் சென்டா்) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்வதற்கான ரூ. 20 லட்சம் நிதி தொண்டு நிறுவனம் மூலம் பெற்று மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ளது.
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், காவல் கண்காணிப்பாளா், போக்குவரத்து போலீஸாா் மூலம் அறிக்கை பெறப்பட்டுள்ளது.
எந்த சாலையில் ரவுண்டானா அமைப்பது, ஒரு வழிப் பாதை, வாகன நிறுத்தம், கழிப்பறை, மேம்பாலம், புதிய சாலை, அணுகு சாலை அமைப்பது என ஆராய உள்ளனா். ஈரோடு மக்கள் தங்கள் கருத்துகளை 97869-55572 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.