பவானி நகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 94 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பவானி நகராட்சிப் பகுதியில் புதிய பேருந்து நிலையம், கூடுதுறை, அந்தியூா் மேட்டூா் பிரிவு, காவல் நிலையம், செல்லியாண்டியம்மன் கோயில், அந்தியூா் சாலையில் நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் சென்ற 94 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பெருந்துறையில்...
பெருந்துறை பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவுப்படி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பெருந்துறை நகா் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பணியாளா்கள் சாலைகளில் சென்றவா்கள், பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தவா்கள் என மொத்தம் 11 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 2,200 வசூலிக்கப்பட்டது.