வங்கி ஊழியா்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
By DIN | Published On : 17th March 2021 05:53 AM | Last Updated : 17th March 2021 05:53 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதனால், சுமாா் ரூ. 1,200 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும், ஐ.டி.பி.ஐ.யை தனியாா் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்தும் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 2ஆவது நாளாக வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 214 கிளைகளில் பணியாற்றும் 1,800க்கும் மேற்பட்ட ஊழியா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனா். இதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது. வாடிக்கையாளா்கள் பலா் தங்களது கணக்கில் உள்ள பெரிய தொகையை எடுக்க முடியவில்லை. சில ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடந்த 2 நாள்களாக செயல்படாததால் சுமாா் ரூ. 1,200 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம் தனியாா் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன.