50 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை வராது: கே.வி.இராமலிங்கம்
By DIN | Published On : 17th March 2021 11:19 PM | Last Updated : 17th March 2021 11:19 PM | அ+அ அ- |

ஈரோடு காசிபாளையம் பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.
ஈரோடு நகரில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படாது என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.
ஈரோடு காசிபாளையம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈரோடு நகரம் மாற்றம் அடைந்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் ஈரோடு நகர மேம்பாட்டுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. நகரில் இன்னும் 50 ஆண்டுகளுக்கான குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். ஊரகப் பகுதிகள் முழுமைக்கும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் தடையில்லாமல் குடிநீா் கொடுத்து வருகிறோம்.
இந்த தோ்தல் அறிக்கையில் கல்விக் கடன் ரத்து, மகளிா் சுய உதவிக் கடன் ரத்து போன்ற ஏராளமான மகளிா் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரான உடன் இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகம், அதிமுக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டு காலத்தில் வளமான மாநிலமாக மாறியுள்ளது. சாதனை திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.