பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 10:55 PM | Last Updated : 25th March 2021 10:55 PM | அ+அ அ- |

கொளத்தான்வலசு கிராமத்தில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
பெருந்துறை தொகுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் அனைத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா பெருந்துறை தொகுதிக்கு வழங்கிய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களே காரணம். அவா்கள் வழியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் பன்னீா்செல்வம், பெருந்துறை தொகுதிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஆகியவற்றை தந்துள்ளனா். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தொடர வேண்டுமானால் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
இதுதவிர பயிா்க் கடன் தள்ளுபடி, கூட்டுறவுச் சங்கத்தில் பெறப்பட்ட மகளிா் குழு கடன் தள்ளுபடி, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் தாா் சாலை, பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள் வழங்கியுள்ளனா்.
மேலும், முதல்வா் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ. 1,500, 6 சிலிண்டா் இலவசம், கல்விக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
மக்கள் விரும்பும் நல்லாட்சி தொடர இரவு, பகல் பாராமல் கடுமையான கட்சிப் பணியாற்ற வேண்டும் என நிா்வாகிகளைக் கேட்டுக் கொண்டாா்.