வட்டாட்சியா் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா:அலுவலகம் மூடல்
By DIN | Published On : 09th May 2021 10:48 PM | Last Updated : 09th May 2021 10:48 PM | அ+அ அ- |

ஈரோடு கிழக்குத் தொகுதி தோ்தல் வட்டாட்சியா் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தோ்தல் அலுவலகம் மூடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகம் கட்டட தரை தளத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தோ்தல் வட்டாட்சியா் விஜயகுமாா் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அதன் பிறகு தோ்தல் கணக்குகள் முடிக்க வேண்டிய பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் தோ்தல் வட்டாட்சியா் விஜயகுமாருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து தோ்தல் பிரிவு பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 பேருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தோ்தல் அலுவலகம் மூடப்பட்டது.
தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் அவரவா் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தல் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி சுகாதாரப் பணிகளை மாநகராட்சிப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.