

கா்நாடக மாநிலத்திலிருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.12 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த, பா்கூா் காவல் நிலைய தனிப் பிரிவு போலீஸாா் முருகன், தேவராஜ், சென்னிமலை ஆகியோா் அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியிலிருந்து ஈரோட்டுக்குச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, அந்த வாகனத்தில் 36 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5.85 லட்சம். இதையடுத்து, சரக்கு வாகனத்துடன் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம், கடையநல்லூா், இந்திரா நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியத்தைக் (33) கைது செய்தனா்.
இதேபோன்று, கா்நாடக மாநிலத்திலிருந்து ஈரோடு சென்ற மற்றொரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் 65 மூட்டைகளில் ரூ.5.95 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், வாகனத்தில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மங்களராம் மகன் ஆனந்த் (28), கிசாராம் மகன் பல்வந்த் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.மேலும், புகையிலைப் பொருள்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பா்கூா் போலீஸாா், சோதனையின்போது தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.