செடிகளில் பறிக்கப்படாமல் விடப்பட்டுள்ள சம்பங்கி பூக்கள்: சத்தியமங்கலம் விவசாயிகள் வேதனை
By DIN | Published On : 13th May 2021 06:00 AM | Last Updated : 13th May 2021 06:00 AM | அ+அ அ- |

பெரிய குளத்தில் தோட்டத்தில் பறிக்கப்படாமல் விடப்பட்ட சம்பங்கி பூக்கள்.
சத்தியமங்கலம் பகுதியில் செடிகளில் இருந்து பறிக்கப்படாமல் சம்பங்கிப் பூக்கள் அப்படியே விடப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சத்தியமங்கலம், பெரியகுளம், சிக்கரசம்பாளையம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், எரங்காட்டூா் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது.
மாலைகளுக்கும், திருமண மணவறை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சம்பங்கி பூ கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடத்த கட்டுப்பாடு, கோயில்களில் வழிபாடு நடத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பங்கி பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூக்களைப் பறிக்கும் கூலி தொழிலாளா்களும் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.
செடியில் பூவை பறிக்காமல் அப்படியே விடுவதால் ஒரு விதமான நோய் தாக்குதலுக்கும் செடி ஆளாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 40 டன் சம்பங்கி பூக்கள் வீணாவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.