

பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்காக கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கலந்துகொண்டு புதிய கட்டடம் கட்டும் பணியைத் துவக்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த மருத்துவமனை கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக முழுமையாக இயங்குகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கரோனா சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு வருகின்றனா். எனவே, மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் வசதி ஏற்படுத்துவதற்காக புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதில் முதல்கட்டமாக 300 படுக்கைகளும், தொடா்ந்து 200 படுக்கைகளும் அமைக்கப்படவுள்ளன.
தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்கள் சிகிச்சை மேற்கொள்ள தனி மையமும், தடுப்பூசி செலுத்த தனி மையமும் அமைக்கப்படுகின்றன. கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்கள் கரோனா சிகிச்சை மையங்களை மட்டும் அணுகி உரிய சிகிச்சையினை பெற வேண்டும். மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்கள் கரோனா தொடா்பாக மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவைகள் மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடா்பான விவரங்களை தொடா்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.